இருமொழிக் கொள்கை எனும் புற்று நோய்…

இரு மொழிக் கொள்ளி கொடுத்த அண்ணா?

இரு மொழிக் கொள்ளி கொடுத்த அண்ணா?

தன்னாட்டில் தன்மொழியில் பேசவும் எழுதவும் எடுத்துச் சொல்லவும் கூடிய அனைத்துத் திறமைகளும் இருந்தும், உயரும் வழிகள் குன்றிக் கொண்டே போகும் ஒரு கேடு கெட்ட முன்னேற்றப் பாதையை நாம் வரித்துக் கொண்டுள்ளோம். அதை விரும்பி வேறு மேற்கொண்டும் வருகிறோம். அதற்கு அண்ணாவின் இரு மொழிக் கொள்கைஒரு நாடாய் வாழ ஒரே மொழிவேலை கிடைக்க வேண்டும் ஆங்கிலம்பன்முகக் கலாச்சாரம் என்றெல்லாம் விளக்கம் கொடுத்து சாகடித்துக் கொள்கிறோம்.

உங்களுடன் பேசவும் எழுதவும் உரையாடவும் ஒரு போதும் எனக்கு இன்னொரு மொழியின் தேவையிருந்ததில்லை.  இருக்கவும் போவதில்லை. நிர்வகிக்கவும், நீதி வழங்கவும், தங்களுக்குள் வணிகம் செய்து கொள்ளவும், நுட்பங்களை எடுத்துச் சொல்லவும், அவற்றைக் கொண்டு ஆக்கவும் அழிக்கவும், முக்தி அளிக்கவும் கூட தமிழ் ஒரு போதும் தட்டுப்பட்டுப் போன தில்லை.

இடையே இங்கு நிலவிய எளிய கல்வி தொழில் முறைகள் சிதைக்கப்பட்டு அவற்றிற்கெல்லாம் உரிய அங்கீகாரம் இல்லாது போகவே, மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாது, அவரவர் வசம் இருந்த தொழில் நுட்பங்கள் எல்லாம் போய், மேற்கே கிளைத்த அறிவியல் தொழில்நுட்பங்களை ஆங்கிலேயர் விதித்த வண்ணமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.

அறிவில் அவரறிவு இவரறிவு என்றில்லை. வரலாற்றில், சிலருக்கு சில அறிவு பல்வேறு காரணங்களால் சற்று முன்னரே பாத்தியப்பட்டு போகிறது. அவ்வளவுதான். அவை மற்றவரை சென்றடைய சிறிது காலம் பிடிக்கிறது. அடுத்த பெரிய மாற்றம் கடைசியாக அதனைப் பெற்றவரிமிருந்தே வரக்கூடும் என்பதற்கும் வலுவானச் சான்றுகள் உள்ளன.

அவை ஆங்கிலேயரிடமிருந்து வரத் தொடங்கிய சிறிது காலத்திற்கெல்லாம் கூட அவை நம்மொழியாக்கப் பட்டு வர வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அதுவே எல்லாருக்கும் ஏற்புடைய வழி என்ற தெளிவிருந்தது. இன்று எல்லாரும் ஆங்கிலம் கற்று அவற்றை அனைவரும் கற்றுக் கொள்ளட்டும் என்று புத்திமதி வழங்கப்படுகிறது.  மக்கள் மொழிக்கு திறனூட்டுவது என்பது மக்களுக்கு திறனூட்டுவது என்பது நாகரிக மக்களுக்கு விளங்குவதில்லை.

நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் ஆங்கிலத்திலேயே அதிகம் இருக்கின்றன பதியப் பெறுகின்றன என்பதே ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக அனைவரும் கற்க வேண்டிய காரணமாகப் பலரும் கருதுகிறோம். அது இன்னும் நூறாண்டுகளுக்குக் கூட பொருந்தும். நூறாண்டுகளுக்குப் பின்னரும் பொருந்த வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம்!

ஆனால் நம்மிடையே மேற்கொள்ளப்படும் பொதுவான உரையாடல்கள் – நீதி – நிர்வாகம் – வியாபாரம் – நாம் பயன்படுத்தும் நவீன கருவிகள் – நமக்கு இடப்படும் உத்தரவுகள் – நம்முடன் நம்மை பாதிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கைகள் போன்ற அன்றாட வாழ்வியல் விவகாரங்களில், அந்த மூன்றாவது மொழியை சொந்த மொழிக்கு மாற்றாய் சொந்த நாட்டில் பயன்படுத்தத் தேவை ஏதுமில்லை.

ஒரு வேளை, அண்ணாவின் இரு மொழிக் கொள்கையை மீறக் கூடாதென்பதால் இவற்றிற்கும் அதனைக் கட்டிக் கொண்டுத் திரிகிறோமா? ஆனால் பல இடங்களில் அவை ஆங்கிலத்தில் மட்டும் தானே கிடைக்கிறது. இரு மொழிக் கொள்கை கூட இல்லை. ஆங்கில மொழிக் கொள்கையாக அல்லவா இருக்கிறது. ஒன்றைத் தமிழில் மட்டும் வைத்திருப்போரை ஏளனமாய்ப் பார்ப்போர் ஆங்கிலத்தில் மட்டும் கொடுப்பவனை ஏன் என்று கூடக் கேட்பதில்லையே?

அண்ணா தகுந்த காரணங்கள் கிடைக்கக் கிடைக்க தன்னுடயை முன்முடிவுகளை மாற்றிக் கொள்ளத் தயங்காத மனிதர் என்பதை அவரது வாழ்வு வெளிப்படையாகவே தெரிவிக்கிறது. அப்படிப்பட்டவர் மாற்று ஏற்படும் போது மாற்றிக் கொள்ளத் தயங்கமாட்டார் என்று கருத்தில் கொள்ளவும். மாற்றம் ஏற்படவே விழைந்திருக்கவும் கூடும்!

ஆகையால் இன்னும் குறைந்தது 15-20 ஆண்டுகளுக்காவது மாறி மாறி ஆட்சிக்கு வர சாத்தியமிருக்கும் கழகக் கண்மணிகள் அண்ணா பேச்சுக்கு மறுபேச்சில்லை என்றல்லாது, அந்நிலையை மாற்றிக் கொண்டு தமிழகம் தன் விவகாரங்களைப் பொருத்த மட்டில் ஒரு மொழிக் கொள்கையை தன்மொழிக் கொள்கையை கடைபிடிக்கத் தொடங்க வழி வகை செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் அல்ல, இதற்காக மட்டும்தான் ஆங்கிலம் என்ற தெளிவு பிறந்தால் போதும் வழி பிறக்கும்.

அறிவியல் தொழில் நுட்பங்களில் கூட அதி விரைவாக மாற்றத்தினை கொண்டு வர பெரும் படையும் நிதியும் அரசோ அரசு உறங்கிக் கொண்டே தொடரும் பட்சத்தில் மக்களோ வழிகளை ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும்.

பொது மொழி – உலகளாவிய வணிக மொழி – ஆங்கிலத்தால் கும்பனிகளில் வேலை வாய்ப்பு கிடைப்பது – தமிழ்நாட்டில் வந்து குடியேறி பிற மொழிகளைத் தாய் மொழியாகப் பேசும் ஏனைய இந்தியருக்கு ஏற்படும் இடர் – நம்முடைய பிற மொழியறிவுத் தேவை போன்றவற்றிற்கும் இதற்கும் தொடர்பில்லை! அவை தனியே!

என்ன சொல்லப் போகிறாய்?